சரவணனின் வலைக்குறிப்புகள்

Friday, July 23, 2004

Nothing to Lose

சில நாட்களுக்கு முன்னே டிவியில் பார்த்த ஒரு படம் பற்றிய நினைவுகளை எழுத வேண்டும் என நினைத்து தள்ளிப்போய்க் கொண்டே இருந்தது. இன்று கிடைத்த சிறு இடைவெளியில் எழுதி விடுவது என்று முடிவு செய்து விட்டேன்.

பார்த்த படம் - Nothing to Lose
நடிகர்கள் - மார்ட்டின் லாரன்ஸ், டிம் ராபின்ஸ்
படம் வெளியான வருடம் - 1997

ஒரு சாதாரணமான நகைச்சுவை படம்தான்.  சந்தர்ப்பவசத்தால் மனைவி தன்னிடம் உண்மையாயில்லை என்று தவறாக நினைத்துவிடும் ஒரு சராசரி மனிதன் (டிம்), இனி இழப்பதற்கு ஒன்றுமேயில்லை என்னும் உணர்வுக்கு வந்து, வாழ்க்கையின் பிடிப்பு மொத்தமும் அழிந்து, கார் போன போக்கில் போய்க்கொண்டிருக்கையில் வழிப்பறிக்காரன்(லாரன்ஸ்) ஒருவனின் சம்பத்து ஏற்பட்டு, இருவரின் வாழ்க்கையும் எப்படி நண்பர்களாக இணைகிறது என்பதே கதை.

இங்கு நான் சொல்ல நினைத்தது, ஒரு நாளிரவு டிம், லாரன்ஸின் வீட்டில் தங்க நேரிடுகிறது. அப்போது அந்த கதாபாத்திரம் உணர்வதாக காட்டப்படும் நிகழ்வுகள் என்னை மிகவும் கவர்ந்தது. கறுப்பனாக இருப்பதால் சரியான வேலை எதுவும் லாரன்ஸுக்கு கிடைக்கவில்லை. வீட்டு செலவுகளுக்கே வழிப்பறி செய்து பணம் ஈட்டும் நிலைமை. ஆனால் அவன் வீட்டுக்குள் வரும்போது அவனுடைய மனைவி, இரு குழந்தைகள் அவனிடம் பாசத்துடன் ஒட்டிக்கொள்கின்றன. வெளியில் படும் கஷ்டங்கள் எதுவும் அப்போது அந்த கதாபாத்திரத்துக்கு நினைவுக்கு வந்து தொந்தரவு படுத்துவதில்லை. தன்னை முற்றிலும் சந்தோசமான மனிதனாக, வாழ்க்கையில் எல்லாம் கிடைத்துவிட்ட நிம்மதியோடு, நாளை பற்றிய கவலை ஏதுமில்லாததுபோல் அவன் படுக்கைக்கு செல்கிறான். டிம் கதாபாத்திரத்துக்கோ, நல்ல கௌரவமான வேலை, கார், வீடு என எல்லாமுண்டு; ஆனால் தற்போது அவை எதுவும் மகிழ்ச்சி அளிப்பதாய் இல்லை. எத்தனை பொருள் ஈட்டினாலும் மகிழ்ச்சி, நிம்மதி என்பது நம்முடன் இருக்கும் சக மனிதர்களால், குடும்பத்தாரால்தான் கிடைக்க முடியும் என்பது மிக அழகாகக் கோடிட்டு காட்டப்பட்டிருந்தது. டைரக்ட் செய்த Steve Oedekerkக்கு இதன் மூலம் ஒரு 'ஷொட்டு' :)

அனுதாபங்கள்

நேரமின்மை காரணமாக இப்பொழுதுதான்....

கும்பகோணம் சம்பவம் மிகத்துயரமான ஒன்று. எனது ஆழ்ந்த அனுதாபங்களை சம்பந்தப்பட்ட குடும்பத்தினருக்கு தெரிவித்துக் கொள்கிறேன். எல்லாம் வல்ல இறை அவர்களை தேற்றட்டும். சில மாற்றங்கள் ஏற்படுவதற்காக கொடுக்கப்படும் விலைகள் மிக அதிகம். இனியாவது அதிகாரிகளும், பொது மக்களும் தத்தம் பொறுப்புணர்ந்து, கடமைகளை சரியாகச் செய்ய வேண்டும். இப்போது ஏற்பட்ட வடு எல்லோர் மனதிலும் இருந்தாலே, பணத்திற்காக இதுபோன்ற முறையற்ற பள்ளிகளுக்கு அனுமதி அளிப்பது நடக்காது. இது போன்ற பள்ளிகளை பொதுமக்களும் புறக்கணிக்க வேண்டும்.

வலைப்பதியும் நண்பர்கள் பலரும் ஒருங்கிணைந்து சில முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். அவர்களின் முயற்சிகள் பலனடைய வாழ்த்துக்கள்.

Wednesday, June 30, 2004

எத்தனை காலம்தான் இப்படி?

அண்ணா அறிவாலயம் கட்டியதில் சரியான அளவு இடம் பொதுமக்கள் உபயோகத்திற்காக அளிக்கவில்லை என்று பிரச்சனை கிளப்பியிருக்கிறார்கள் ஆளுங்கட்சித் தரப்பு. ஆளுங்கட்சி அனுமதி அளித்த கட்டிடங்களில் பல முறைகேடுகள் நடந்திருக்கிறது எனக் கத்துகிறது எதிர்கட்சி. இனி என்ன, போராட்டம், வழக்குகள், நீதிமன்றங்கள் என பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. இதனால் ஏற்படும் அநாவசிய செலவுகளெல்லாம் எவன் அப்பன் வீட்டு வரிப்பணம்?

நம்ம ஊர்களில் எல்லாத் தெருவோரமும் கடைதான். ரோட்ட விட்டு கொஞ்சம் கீழ இறங்குனா ஏதாவது கடை வாசப்படியிலதான் முட்டிக்கனும். இந்த மாதிரி கடை வைக்க கொடுத்த அனுமதியெல்லாம் முறையானதாவா இருக்கும்? எந்த கடைக்காரராவது தன் வாகனம் நிறுத்தவாவது இடம் விட்டு கடை கட்டியிருப்பாரா? நெரிசல்கள் நமது வாழ்க்கையில் ரொம்பப் பழகிப்போய் அது ஒரு அசெளகரியமாகவே நமக்கு தெரிவதில்லை.

அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் பொதுமக்களும் தன் பணப்பையை மட்டும் கவனத்தில் கொள்வது எப்பொழுது குறைகிறதோ, அப்பொழுதுதான் நாடு உருப்படும்.

Tuesday, June 29, 2004

எழுத்தாளர் பாலகுமாரன்

தமிழ்நாட்டைவிட்டு வெளியே வந்தவுடன் நான் ரொம்ப மிஸ் பண்ணது எழுத்தாளர் பாலகுமாரன் அவர்களின் புத்தகங்கள். எத்தனையோ எழுத்தாளர்களைப் படித்திருந்தாலும், என் மனதில் இன்றும் அவரின் இடத்தை ஆக்கிரமிப்போர் எவருமில்லை. 93களில் நண்பர் ஒருவரால் அறிமுகப்படுத்தப்பட்டது அவரது எழுத்துக்கள். அவர் அறிமுகப்படுத்தியது 'பச்சை வயல் மனது' என்னும் நாவல். (அவரது எல்லா நாவல்களையும் ஒன்னொன்னா படிக்கும் போதுதான் தெரிந்தது, 'தென்னம்பாளை' என்னும் நாவலை நான் பள்ளியில் படிக்கும் போதே படித்திருக்கிறேன் என்று. அப்பொழுதெல்லாம் யார் எழுதுகிறார்கள் என்றெல்லாம் கவனிப்பதில்லை. சுவராசியமான ஒரு புத்தகம். அவ்வளவே.)

அந்த நண்பரிடம் அறிமுகம் வாங்கி, அவர் உறுப்பினராயிருந்த வாடகை நூல் நிலையத்திலேயே நானும் உறுப்பினரானேன். அந்த நூல் நிலையத்தாரும் பாலகுமாரனின் ரசிகராயிருந்திருக்க வேண்டும், பாலகுமாரனின் எல்லா நாவல்களும் அழகாக பைண்ட் செய்யப்பட்டு கிடைத்தன. ஒரு எழுத்து எனக்குப் பிடித்துப் போனால், அதை பகுதி பகுதியாய் மாதக்கணக்கில் படிப்பதெல்லாம் என்னால் செய்ய முடியாது. ஒரே மூச்சு, தம் கட்டி இழுத்துவிட்டுத்தான் மறுவேலை. அந்த புத்தகம் முடிக்கும்வரை வேறெதுவும் செய்யத் தோணாது. இதனால் வாரத்தில் இரண்டு நாவல்கள் எப்படியும் முடித்து விடுவேன். அம்மா, அப்பா திட்டுவதெல்லாம், கையில் புத்தகம் இருக்கும் போது, இந்த காதில் வாங்கி அந்த காதில் விட்டுவிடுவது நம்ம வழக்கம். வெறும் தரையில் உட்கார்ந்து படிக்க ஆரம்பித்து, பின் சுவரில் சாய்ந்து, தலைக்கு கையை மட்டும் வைத்துக்கொண்டு படுத்து (இந்தா தலகாணி, கையை வச்சுகிட்டே எவ்வளவு நேரம்டா படிப்பே - அம்மா) மணிக்கணக்கில் படிப்பதே என் தலையாய பொழுதுபோக்கு.

ஒரு வழியாய் அந்த நூல் நிலையத்தில் உள்ள பாலகுமாரன் புத்தகங்கள் எல்லாம் படித்தாகிவிட்டது. மற்ற எழுத்தாளர்களின் புத்தகங்களை அங்கிருந்து எடுத்து படித்துக் கொண்டிருந்தாலும், எனக்கென்னமோ என் மானசீக எழுத்தாளரின் எழுத்துக்கள் இன்னமும் வராதா என்ற ஏக்கம் இருக்கும். கடைகளில் பாலகுமாரன் என்ற வார்த்தை தெரிந்துவிடக்கூடாது, உடனே அந்த புத்தகத்தை வாங்கிவிட்டுத்தான் மறுவேலை. அவரின் தொடர் ஆரம்பிக்கப்போகிறது என்று ஏதாவது சுவரொட்டியில் பார்த்தால், உடனே அந்தப் பத்திரிக்கையின் சந்தாதாரர் என்று இருந்தேன். முதல் புத்தகத்திலிருந்து இன்றுவரை வாங்கிய புத்தகங்களெல்லாம் இன்றும் பத்திரமாக என் வீட்டில் இருக்கின்றன.

வெறும் கதையாக சொல்லாமல், வாழ்க்கை அலசல்களோடு, சில தேடல்களோடு, பல குறுக்குக் கேள்விகளோடு அந்த புத்தகங்கள், அடுத்த பத்து வருடத்தில் என்னில் விதைத்தது ஏராளம். இப்பொழுது திரும்பிப் பார்க்கும் பொழுது அந்தப் புத்தகங்கள் மட்டும் இல்லையென்றால் இன்று நான் இந்த நிலைமையில் இருந்திருக்க மாட்டேன் என்றே நினைக்கத் தோன்றுகிறது. இப்பொழுது எங்கிருக்கிறார் என்று தெரியாவிட்டாலும், எனக்கு பாலகுமாரனை அறிமுகப்படுத்திய அந்த நண்பருக்கு மானசீக நன்றிகள்.

இப்படி இருந்தவனை பிடித்து இழுத்துப் போட்டுக் கொண்டது மும்பாய். எப்பவாவது அந்தேரி லோக்கல் ரயில்வே ஸ்டேசனுக்கு அருகில் இருக்கும் ஒரு சின்ன புத்தகக்கடையில் அவரின் புத்தகங்கள் தென்படும். அதை விட்டால், ஆறு மாதத்திற்கு ஒருமுறை வீட்டிற்கு வரும்போது, வழியில் எந்த கடையில் அவரின் புத்தகங்கள் தென்பட்டாலும் வாங்கி படிக்காமல் விட்டதில்லை.

மும்பாயிலாவது அப்படி ஆனிக்கொருதடவை, அமாவசைக்கொருதடவைன்னு அவரின் எழுத்துக்கள் கிடைத்துக் கொண்டிருந்தது. அமெரிக்கா வந்தவுடன், சுத்தம். போனமுறை ஊருக்குப் போன போது நான் வாங்கி வந்த புத்தகம், 'உடையார்'. அடுத்த தடவை பாலகுமாரன் புத்தகம் வாங்கும் அனுபவத்துக்காக காத்திருக்கிறேன். ஊருக்குப் போய், படித்த புத்தகங்களையே திரும்ப படிப்பதெல்லாம் (இன்னும் பாலகுமாரனை விடலையாடா? - அம்மா) ஒரு சுகம். பயண சுமை அனுமதித்தால், இந்த தடவை எல்லா புத்தகங்களையும் இங்கு கொண்டு வந்து விடவேண்டும்.

Monday, June 28, 2004

ஆசை யாரை விட்டது..

நம்மாளுங்க எழுதுற வலைப்பதிவுகள பாத்துட்டு, நானும் ஒரு வலைப்பதிவு கணக்கு ஆரம்பிச்சேன்னுதான் பேரு, ம்ம்ம்.. இதுவரைக்கும் ஒன்னும் எழுதல. சரி, திட்டம் 'சோதனை ஓட்டத்தில்' இருக்குன்னு என்னைய நானே இத்தனை நாளா சமாதானப்படுத்திக்கிட்டு இருந்தேன். எல்லாருடைய வலைப்பதிவுகளுக்கும் போய்ட்டு, அப்படியே நம்ம கணக்கு இன்னம் உயிரோட இருக்கான்னு பாக்கறதுக்கு இந்த பக்கத்துக்கு வரும் போதெல்லாம், 'வெறிச்'ன்னு இருக்கும். இனிமே எதாவது எழுதறதுன்னு முடிவு பண்ணிட்டேன். பார்ப்போம்., இந்த திட்டம் முழுமையா செயல்படுத்தப்படுதா, இல்லை திரும்பவும் சோதனை ஓட்டங்கள்தானான்னு..!

Sunday, March 07, 2004

வருக வருக நண்பர்களே.. வணக்கம்

வணக்கம். என் பகிர்வுகள் காண ஆவலாய் வரும் உள்ளங்களுக்கு நன்றி. அப்பப்போ ஏதாவது எழுதலாம் என்று இந்த பக்கங்களை உருவாக்குகிறேன். படித்து கருத்து சொல்லுங்கள்.